செந்தில் பாலாஜி வேட்பு மனு ஏற்பு… கரூர் குரூப் சுயேச்சைகள் காலி…!
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக ,அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்பட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையாக 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் இன்று 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. உடுமலையை சேர்ந்த செந்தில் பாலாஜி என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தார் . இவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது .படிவம் 26 ல் இவர் சரியான விவரங்களை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதேபோல் சுயேட்ச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் மற்றும் மாற்று வேட்பாளர்கள் உள்பட 18 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை. அதில் கையெழுத்து போடவில்லை என கூறி நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக ஏஜென்டுகள் மனு பரிசீலினையின் போது எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் முறையாக கையெழுத்து போடப்பட்டிருக்கிறது. படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்து மனுவை ஏற்றனர்.
சுயேச்சை வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது மனு சரியாக உள்ளது. செந்தில் பாலாஜி என்ற பெயருக்காக எனது மனு நிராகரித்து விட்டனர் என கடும் எதிர்ப்பு காட்டினார். இதனால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக தெற்கு தொகுதியில் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கோவையில் தேர்தல் வேலை செய்வதற்காக கரூரிலிருந்து ரகசியமாக இவர்களை செந்தில் பாலாஜி களமிறக்கி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் என்ற போர்வையில் விதிமுறை மீறல் செய்ய வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை தெற்கு தொகுதி வேட்பு மனுக்கள் விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உளளது.
