கோவை டாஸ்மாக் பாரில் ஊழியர் அடித்து கொலை: 2 பேர் கைது…!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). இவர் கோவை வெரட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் பணியில் இருந்தார் .
அப்போது கோவை இடையர் வீதி பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி பிரபு (28) மற்றும் தெலுங்கு வீதியை சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் மது குடிக்க வந்தனர். நெருங்கிய நண்பர்கள் ஆன இவர்கள் அடிக்கடி இங்கே மது குடப்பதாக தெரிகிறது .
இருவரும் மது பாட்டில் வாங்கி மது குடித்து சுந்தர்ராஜனிடம் முட்டை பொடிமாஸ் கேட்டனர். சிறிது நேரத்தில் சுந்தர்ராஜன் முட்டை பொடிமாஸ் கொண்டு வந்து கொடுத்தார். அதை பார்த்த பிரபு மற்றும் மனோஜ் ஆகியோர் முட்டை பொடிமாஸ் இவ்வளவு தான் இருக்குமா அளவு ரொம்ப குறைவாக இருக்கிறது என கூறியுள்ளனர்.
அதற்கு அவர் அவ்வளவுதான் கிடைக்கும் என பதில் அளித்தார். இதில் கோபம் அடைந்த இருவரும் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர் . போதை உச்சத்தில் இருந்த நிலையில் அவர்கள் திடீரென சுந்தரராஜனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
சுவற்றின் மீது பிடித்து தள்ளி மார்பில் குத்தியதாக தெரிகிறது . இதில் மூச்சு திணறிய சுந்தரராஜன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் . இது தொடர்பாக வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரபு மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இரண்டு பேரிடம் விசாரணை செய்த போது எங்களை அவர் அவதூறாக பேசினார். அதனால் கோபம் அடைந்து தாக்கினோம் அதில் அவர் இறந்து விட்டார். போதையில் என்ன நடந்தது என எங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றனர் .
இந்த டாஸ்மாக் பாருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் 300 மீட்டர் தூரம் மட்டுமே இருக்கிறது. அடிக்கடி இந்த பாரில் தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு வெரைட்டி ஹால் ரோடு போலீசார் பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்தது தொடர்பான ஆடியோ பதிவு வெளியானது .
இது கோவை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது . போலீசார் தொடர்ந்து மாமுல் வாங்கி வருவதாக அந்த வீடியோவில் பார் உரிமையாளர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்த ஆடியோ பதிவு இருந்தது. இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாரில் போதை நபர்களால் பார் ஊழியர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
