விபத்து தடுக்க ‘ஹாட்ஸ் பாட்’ பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள்
தமிழகத்தில் ரோடு விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் பகுதிகளை கண்டறிந்து அங்கே விபத்து நடக்காமல் தடுக்கும் வகையிலான திட்ட பணிகள் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது.
மாநில அளவில் 1208 இடங்களில் அதிக விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் ஆக அடையாளம் காணப்பட்டது. இங்கே 865 இடங்களில் விபத்து நடப்பதை தடுக்கும் வகையிலான பணிகள் நடத்தப்பட்டது. வேகத்தடை அமைப்பு ரிப்ளக்டர், பாதசாரிகள் கடக்கும் பகுதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது.
மேலும் விபத்து நடக்காத வகையில் ரோடு சீரமைப்பு பணிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாக் ஸ்பாட் ஆக மாற வாய்ப்புள்ளதாக 3980 இடங்களை சாலை பாதுகாப்பு கமிட்டி ஆய்வு செய்து கண்டறிந்தது. இந்த இடங்களில் 2185 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நடவடிக்கை காரணமாக விபத்து இறப்பு சதவீதம் கணிசமாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறையினார் கூறுகையில், “மாநில அளவில் அளவில் விபத்துக்களை தவிர்க்க முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களை போல் இல்லாமல் வாகனங்கள் உயரமான பகுதி வழியாக செல்லும் போது டிவைடர், ரோட்டோர பகுதி, சுவர்களின் மீது மோதும் சூழல் இருக்கிறது. இதை தவிர்க்க பல்வேறு இடங்களில் மோதல் தடுப்பான்கள் நிருவப்பட்டு வருகிறது.
வாகனங்கள் மோதினாலும் அதிக பாதிப்பு, உயிர் சேதம் தவிர்க்க இந்த மோதல் தடுப்பான்கள் உதவியாக இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த மோதல் தடுப்பான் தான் உயிர் காப்பு கவசமாக செயல்பட போகிறது.
மலைப்பகுதிகளிலும், கூர்மையான, பள்ளமான பகுதிகளில் வாகனங்கள் கவிழ்ந்து விடாமல், விபத்து ஏற்படாமல் தவிர்க்க உருளை தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருகிறது. விபத்தில்லாத நிலைமையை உருவாக்க பள்ளமில்லாத ரோடு என்ற சூழலை உருவாக்க நம்ம சாலை என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் பள்ளமான ரோட்டை போட்டோ எடுத்து ஆதாரங்களுடன் தகவல் அனுப்பலாம். இந்த இடத்தில் உடனடியாக சீரமைப்பு பணி நடத்தப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திற்குள்ளும் மாவட்ட ரோடு, இதர கிராம ரோடு பகுதிகளை 72 மணி நேரத்திலும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளமில்லாத ரோட்டை உருவாக்க கொண்டு வரப்பட்ட இந்த செயலி மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ” என்றனர்.
