கை ஏந்தாமல் சைகை காட்டி அசத்தும் காக்கி சட்டை…!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (50).

திருநங்கையான இவர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஹோம் கார்டு என்ற ஊர்காவல் படை காவலராக பணி செய்து வருகிறார். வின்சென்ட் ரோடு, ராஜ வீதி பகுதியில் இவர் பணி செய்கிறார்.

இவர் கூறியதாவது: நான் தங்க நகை வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். என் 14 வயதில் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் பிரேம் என்ற பெயருடன் இருந்த நான் திரு நங்கையாக மாறி விட்டேன். மும்பை சென்று சில காலம் இருந்தேன். பின்னர் பிரேமா என பெயர் மாறி கோவை வந்தேன்.

என் நிலையால் நான் குடும்பத்தினருடன் வாழாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன். அடிக்கடி என் சகோதர சகோதரிகளை சந்தித்து பேசுவேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார்கோ நிறுவனத்தில் பணி செய்தேன். பின்னர் அரசு வைத்த தேர்வில் பங்கேற்று ஹோம் கார்டாக தேர்வு பெற்று 6 மாதமாக பணி செய்து வருகிறேன்.

என்னை போல் திருநங்கை 7 பேர் பணியில் சேர்ந்தனர். மேலும் சிலர் இந்த பணியில் சேர உள்ளனர். கோவை நகரில் போக்குவரத்து நெரிசல் சரி செய்வது சவாலானது, ஆனால் இதை நான் முழு விருப்பமாக செய்து வருகிறேன். ரோட்டில் வாகனத்தில் வருபவர்களுக்கு பல பிரச்னைகள், அவசரம் இருக்கும். அதற்காக விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்ட கூடாது.

இதை சரி செய்ய நான் கவனத்துடன் பணி செய்கிறேன். திருநம்பி ஒருவரும் போத்தனூரில் பணி செய்கிறார். திருநங்கைகளுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் யாசகம் பெற்று வாழ்கிறார்கள். வேலை வாய்ப்பு வழங்கினால் அவர்களின் வாழ்வு மேம்படும். நான் பட்ட படிப்பு முடித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை.

தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள் தெரிந்தும் நான் வேலைக்காக சிரமப்பட்டேன் திருநங்கைகளுக்கு சரியான முறையில் உதவி கிடைத்தால் நல்ல முறையில் பணி செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியும், வேலை வாய்ப்பும் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *