மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் தொடரும் குற்றங்கள்…
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 26 கி.மீ தூரம் அமைந்துள்ளது.
இந்த ரோட்டின் முதல் 4 இ.மீ தூரம் மதுக்கரை போலீஸ் எல்லைக்குள்ளும். 2 கி.மீ தூரம் போத்தனூர் போலீஸ் எல்லைக்குள்ளும், 7 கி.மீ தூரம் செட்டிபாளையம் போலீஸ் ஏரியாவிற்குள்ளும், 5 கி.மீ தூரம் சிங்காநல்லூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் சூலூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் பீளமேடு போலீஸ் ஏரியாவிற்குள்ளும் அமைந்துள்ளது.
நகர், புறநகர் போலீசார் பைபாஸ் ரோட்டை பங்கு போட்டு ரோந்து பணி நடத்தவேண்டியுள்ளது. சில நேரங்களில் போலீசார் எல்லை தாண்டி ரோந்து பணி நடத்துவதும் நடக்கிறது.
வாகன விபத்து, குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்க சென்றால் போலீசார் எல்லையை காரணம் காட்டி புகார் வாங்க மறுத்து அலைய வைக்கின்றனர். பைபாஸ் ரோட்டை புறநகர் அல்லது நகர்ப்பகுதி போலீஸ் கட்டுபாட்டில் முழுமையாக விடவேண்டும். இல்லாவிட்டால் ஹைவே பேட்ரோல் பிரிவின் கட்டுபாட்டில் விடலாம். இல்லாவிட்டால் குற்றங்கள் குறையாது
போலீசாரின் அலட்சிய போக்கு குறையும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டிற்கு முன் நகரின் கட்டுபாட்டில் இருந்த பைபாஸ் ரோட்டை ஒட்டியிருந்த சில கிராமங்கள் புறநகர் பகுதி போலீஸ் எல்லைக்குள் சென்று விட்டது. பின்னர் மீண்டும் அந்த கிராமங்கள் நகர் பகுதி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. நகரின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டும்,
புறநகரான சூலூர் வசம் இருந்த கிராமங்கள் வேறு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இணைக்கப்பட்டும் பிரச்னை தீரவில்லை. நகர் பகுதி போலீஸ் எல்லை விரிவான போதும் பைபாஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், ” இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வாகனங்களை வழி மறிக்கிறார்கள் .பணம் மற்றும் பொருள்களை பறிக்கும் செயல்கள் நடக்கிறது. பாலியல் ரீதியான அத்துமீறல்கள் , போதை கும்பலின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் குடும்ப சூழல் காரணமாக புகார் தர முன்வருவதில்லை. தொடர் குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்றனர்.
மாவட்ட போலீசார் கூறுகையில், “பைபாஸ் ரோட்டின் பெரும்பகுதி காடாக இருப்பதால் போலீஸ் எல்லையை தீர்மானிப்பதில் சிக்கல் இருக்கிறது. ரோந்து பணியிலும் பல்வேறு இடர்பாடு உள்ளது. பைபாஸ் ரோட்டிற்கு என தனியாக போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க முடியாத நிலையிருக்கிறது,” என்றனர்.
