கோவை சிறையில் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா சப்ளை…

கோவை மத்திய சிறையில் மகேஷ் (எ) மகேந்திரன் (26), முரளி (எ) சுரேந்திரன் (22) மற்றும் கலாநிதி (எ) அபிவிஷ்ணு (27) ஆகிய 3 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைச் சந்திப்பதற்காக, கோவை சின்ன தடாகத்தைச் சேர்ந்த நவீன் (27) என்பவர் நேற்று சிறைக்கு வந்துள்ளார். அவர், கைதிகள் 3 பேருக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்தார். அதனை சிறை நுழைவாயிலில் இருந்த சிறை அதிகாரிகள் வாங்கி வைத்தனர்.

பின்னர், கைதிகளை சந்தித்துவிட்டு நவீன் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே சிறை நுழைவாயிலில் இருந்த சிறை அதிகாரிகள் நவீன் கொடுத்து சென்ற தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களைக் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தின்பண்ட பாக்கெட்டுகளுக்குள் நூதன முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள், கஞ்சாவை பறிமுதல் செய்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தின்பண்ட பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 6 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஜெயிலர் திருமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் கஞ்சாவை பெற முயன்ற சிறைக் கைதிகள் மகேஷ், முரளி, கலாநிதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கஞ்சாவை கைதிகளுக்கு சப்ளை செய்ய முயன்ற நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *