கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அதிரடி டெஸ்ட்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது.

இதற்கு துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆர்ஓ), தாசில்தார் அந்தஸ்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஏஆர்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

மாவட்ட அளவில் 30 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் இவர்களிடம் தான் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். ஓட்டு பதிவு நடத்துவது, அலுவலர்களுக்கு பணி வழங்குவது, ஓட்டு மெசின்களை மேலாண்மை செய்வது என அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு பதிவு தொடர்பான முடிவுகளை எடுப்பதும் இவர்கள் தான்.

ஓட்டு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்று வழங்குவதும் இந்த அதிகாரிகள் தான். ஜனநாயக தேர்தலில் அதிகார மையங்களாக இருக்கும் இந்த அதிகாரிகள் பணியாற்றவுள்ளனர்.

அதிகாரிகளின் பணித்திறன் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை தேர்தல் கமிஷன் எழுப்பியது. இதை தொடர்ந்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு திடீரென எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதில் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது செய்ய வேண்டிய நடைமுறை,வேட்பு மனு நிராகரிப்பு, சேலஞ்சிங் ஓட்டு, ஓட்டு மெசின் பழுது, ஓட்டு பதிவு பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பணிகள், ஒட்டு எண்ணிக்கை நாளில் முறைப்படி கவுண்டிங் செய்யும் நடைமுறை,தபால் ஓட்டு பதிவு தொடர்பாக பள்ளி தேர்வு போல் கேள்விகள் கேட்கப்பட்டது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டு மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு திடீரென டெஸ்ட் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முறையான பதில் தராத அதிகாரிகள்,குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை என்ன செய்வார்கள் என தெரியவில்லை.

ஆனால் தேர்தல் விதிமுறை புத்தகம் படிக்க வைத்து இன்னொரு முறை தேர்வு எழுத வேண்டும். அதற்கு பின்னர் தான் முடிவு செய்வார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *