பாறை, பள்ளம்… ரூ.30 கோடி மைல்கல் மேம்பாலம் பணி தாமதம்…

கோவை மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் நடக்கிறது.

3 பேக்கேஜ்களாக பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 13 சிறுபாலங்களுடன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது,

பைபாஸ் ரோட்டின் துவக்கமான மைல்கல் சுகுணாபுரம் மஞ்சு பள்ள ஓடை மீது புதிதாக மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. 800 மீட்டர் நீளத்தில், 32 கர்டர், 6 தாங்கு தூண்களுடன் இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது.

ஓடையில் நீர் பாயும் வகையில் இப்போதுள்ள நீர் பாதையில் சிறு பாலமும் கட்டப்பட்டது. பாலக்காடு ரோட்டில் குனியமுத்தூர், சுகுணாபுரம் வழியாக பைபாஸ் ரோட்டிற்கு செல்ல மேம்பாலத்தின் கீழ் பகுதி பாதை வழியாக சென்று வலது புறமாக திரும்ப வேண்டும். மதுக்கரை வழியாக பைபாஸ் ரோட்டிற்கு செல்ல இடது புறமாக திரும்பி செல்ல வேண்டும். மேலும் பாலத்தின் அருகே சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டது.

இதற்காக மஞ்சு பள்ள ஓடையின் அருகே தேவையான இடம் பெறப்பட்டது. சுடுகாடு மூடி அழிக்கப்பட்டது. தற்போது மேலும் ரோடு அகலமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இங்கே பாறை மற்றும் கல் குழி காணப்படுகிறது. இதை உடைத்து அழித்து ரோடு போட வேண்டியிருக்கிறது.

மேலும் சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் தரை பாலம் கட்டும் பணியும் நடக்கிறது. இந்த பணியும் பாறை காரணமாக பல மாதமாக தாமதமாக நடக்கிறது. பாலத்திலிருந்து 250 மீட்டர் தூரத்திற்கு சந்திப்பு பகுதி அகலமாக்கும் பணியும் முடங்கி போய் கிடக்கிறது. இங்கே பல இடங்களில் ரோட்டில் இருந்த பெரிய பாறைகளை உடைத்து போட்டு விட்டார்கள் பாறை குவியல்களை அகற்ற வில்லை.

மேம்பால பணிகள் பாறைகளை அகற்ற முடியாததால் தாமதம் ஆகி வருகிறது. இதேபோல் போல் குடிநீர் குழாய் காரணமாகவும் பணி பாதிக்கப்பட்டிருக்கிறது. மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *