கஞ்சா, மெத்தபெட்டமைன் இருக்குதா… கோவை பஸ் ஸ்டாண்டில் மாஸ் செக்கிங்… !
கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சிந்தடிக் டிரக் என அழைக்கப்படும் போதைப் பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று அதிகாலை கோவை மாநகர போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் நகரின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் கண்டறிய சோதனை நடத்தினர்.
குறிப்பாக காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ,ஸ்டாண்ட் டவுன் பஸ் ஸ்டாண்ட் போன்றவற்றில் போலீசார் பயணிகள் உடைமைகள் மற்றும் பார்சல் பிரிவுகளில் வைக்கப்பட்டிருந்த பார்சல் மூட்டைகள், பெட்டிகள், கண்டெய்னர்களில் சோதனை செய்தனர் .
இதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறிப்பாக கஞ்சா, மெத்தபெட்டமின் போன்றவை இருக்கிறதா என ஆய்வு செய்தனர். இதில் எந்த போதைப் பொருட்களும் போலீசார் வசம் கிடைக்கவில்லை.
இதேபோல் கோவை ரயில் நிலையத்திலும் போதை பொருட்கள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது . ஒரே நேரத்தில் இதுபோன்ற மாஸ் செக்கிங் மூலமாக போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் தடுக்க முடியும் என கருதி போலீசார் இந்த சோதனை நடத்தினர். நேற்று கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க வேண்டும் .விரைவாக சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து இன்று மாஸ் செக்கிங் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
