கிலோ மீட்டருக்கு 18 ரூவா… கோவையில் கிக் தொழிலாளர்கள் போராட்டம்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆன்லைன் மூலம் உணவு மளிகை மருந்து உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் கிக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏ ஐ டி யு சி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிக் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இது ஸ்விக்கி, ஜொமேடோ, இன்ஸ்டா மார்ட் போன்ற கம்பெனிகள் இணையதளங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதில் பணியாற்றும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. பணிநிரந்தரமோ, பணிப்பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ குறிப்பிட்ட வேலை நேரமோ, மருத்துவ மற்றும் விபத்து காப்பீடோ, பணிக்கொடையோ, ஓய்வூதியமோ, குறைகளை தீர்க்கும் நிரந்தரமான அதிகாரிகளோ என எதுவும் இல்லாத தொழிலார்களாக நாள், நேரம், காலம் பார்க்காமல், மழை, வெயில், குளிர் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், பாடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பொருட்களை எடுக்கச்செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10/- வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
பொருட்கள் எடுத்துச் செல்லும் இடத்திலிருந்து, கொண்டு சேர்க்கும் இடத்திற்குமான ஊதியமாக ஒரு கிலோமீட்டருக்குரூ.18/- வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
விசாரணை,அல்லது விளக்கம் கோராமல் தொழிலாளர்களின் கணக்குகளை முடக்க கூடாது.
பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு வசதியை உடனே அமலாக்க வேண்டும்.
பொருட்களை எடுத்துச் செல்லுமிடத்தில் காத்திருக்கும் நேரம் 7 முதல் 10 நிமிடங்களாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை ஒப்படைத்து திரும்பும் நேரம் 7 முதல் 10 நிமிடங்களாகவும் நேரத்தை நிர்ணயம் செயய வேண்டும்.
தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதற்குரிய அதிகாரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நியமிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருதி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
