கோவை மாவட்டத்தில் ரவுடி ரீல்ஸ்கள் கண்காணிப்பு…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 18-ம்தேதி அவர், ஜாமீனில் வெளியே வந்தார். சில நாட்களிலேயே மர்ம கும்பலால் வெட்டி படுகொவை செய்யப்பட்டார். இக்கொலை, முன்னதாக நடந்த இரட்டைக்கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கை என தெரியவந்துள்ளது. இந்த கொலையை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பவ்வேறு ரவுடி

கும்பல்களின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களில் சிலர், கோவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கோவையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

கோவையில் உள்ள தென்மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தனிப்படை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

குறிப்பாக, ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கதாநாயகர்களாக சித்தரித்து -ரீல்ஸ்’ பதிவிடுவது, வன்முறையை தூண்டும் வகையில் பாடல்கள் மற்றும் வசனங்களுடன் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் கோவை மாநகரில் சமூக வலைதள பதிவுகளால் ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதனை போலீசார் தீவிரமான கண்காணித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ரவுடிகளின் கொட்டதை அடக்கினர். இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ரவுடிகளின் நடவடிக்கையை முடக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சமூக வலைதள மோதல்களுக்கு அதிரடி நடவடிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம். ஆனால், தற்போது மீண்டும் சில இளைஞர்களும், மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ரவுடிகளை பெருமைப்படுத்தி ரீல்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய கணக்குகளை தொடர்ந்து கண்காணித்து, சமூக வலைதள பக்க மிரட்டல்கள், நேரடி மோதலாக மாறுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *