கோவை மாவட்டத்தில் 1.30 மாடுகளுக்கு எல்எஸ்டி தடுப்பூசி
பருவமழை காலங்களில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இது அம்மை வகையை சார்ந்தது. இது கொசுக்கள் உன்னிகள் ஈக்கள், பூச்சிக்கடி மூலம் பரவுகிறது.
நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும் சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்து விடும். அதிக காய்ச்சல், பால் உற்பத்தி குறைதல், தோல் புண்கள், இனப்பெருக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த நோய் தொற்றால் மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு எல்எஸ்டி தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த தடுப்பூசி அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்கள் மூலமாக இலவசமாக போடப்பட்டு வருகிறது. எனவே, இதனை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாட்டினங்களுக்கும் வரும் நவம்பர் 15ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் போடப்பட உள்ளது. இந்த தோல் கழலை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க மாடுகள் மற்றும் மாடுகள் கட்டப்பட்டுள்ள தொழுவங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பூச்சிகள் பெருகாமல் இருக்கும் வகையில் பராமரித்தால் நோய் பரவுதலை தடுக்க முடியும் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
