கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, ஆட்டோ மொபைல்ஸ், கிரைண்டர் உள்பட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட அளவில் தொழில் நிறுவனங்களுக்கான திறன்மிகு தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தேவை அதிகரித்து வருகிறது. சிஎன்சி ஆபரேட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணி செய்பவர்கள், வெல்டர், பிட்டர், சீட் மெட்டல் பணியாளர்கள், கிரைண்டிங் தொழிலாளர்கள் என பல்வேறு பணியிடங்களில் அதிகமாக காலியாக கிடக்கிறது.

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடன் ஆட்கள் கிடைப்பதில்லை. தகுதி உள்ள ஆட்கள் தேவை என தொழில் நிறுவனங்கள் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இதில் போதுமான பலன் கிடைக்காத நிலைமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பஸ் ஸ்டாப், பொது இடங்கள், ரோடு மற்றும் மின் கம்பங்கள், மரங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை தொங்க விட்டு வருகிறார்கள். கணபதி, சரவணம்பட்டி, கீரணத்தம், சங்கனூர், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, பீளமேடு,

சிங்காநல்லூர், அரசூர், கணியூர், கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. மாவட்ட அளவில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஆனால் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடன் ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குறைபாடும் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. பட்டப் படிப்பு. பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். இவர்களில் பல லட்சம் பேர் வேலை கிடைக்காமல் அலுவலக பணிக்காக காத்திருக்கிறார்கள்.

ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் தேவை அதிகமான நிலையில் பட்ட படிப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு பல மடங்கு குறைந்து விட்டது. நிறுவனங்களில் களப்பணி செய்பவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் பயிற்சி வழங்கி அவர்களை திறன்மிகு தொழிலாளர்களாக மாற்றி வேலை வாய்ப்பு வழங்கவும் தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.

பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

வேலை தேடுவோர் கூறுகையில், “படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு தகுதியான ஊதியம் என வேலை வாய்ப்பு தேடி வருகிறோம். பல நிறுவனங்கள் படிப்பு முடித்து வருபவர்களுக்கு ஓரிரு ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் பணி வாய்ப்பு வழங்குகிறது.

ஊதிய உயர்வு அதிகமாக கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவுட் சோர்ஸ் மூலமாக பலர் வேலை செய்கிறார்கள். சில நிறுவனங்களில் குறிப்பிட்ட காலம் வேலை செய்வது, ஒப்பந்த முறையில் சில மாதம் வேலை செய்வதும் நடக்கிறது. பார்ட் டைம் ஜாப் பரவலாகி வருகிறது. ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை என்பதும் குறைந்து வருகிறது, ” என்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம். இதில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை நியமனம் செய்து வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள், நீண்ட கால வேலை வாய்ப்பு என்ற நிலை மாறி விட்டது. அதிக சம்பளம் தரும் நிறுவனங்களை இளைஞர்கள் நாடுகிறார்கள், ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *