கோவையில் அரசு அதிகாரிகள் லீவு… புகார் மனுக்களுக்கு எப்போது தீர்வு…!
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மாவட்ட அளவில் பல்வேறு துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து சென்று விட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக பணிக்கு வரவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளூர் திட்ட குழுமம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என பல்வேறு துறைகளில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கிறார்கள்.
குறிப்பாக தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் பணிக்கு வரவில்லை.தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த 2 மாதமாக குறை தீர்ப்பு கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் பெட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிக்கப்பட்டது.
இந்த பெட்டியை திறந்து புகார் மனுக்களை பார்க்க ஆளில்லை. தேர்தல் முடிந்த நிலையில், பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கங்களது பிரச்னைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க அதிகாரிகளை சந்திக்க வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் பணிக்கு வரவில்லை எனக்கூறி அங்கேயிருந்த அலுவலர்கள் அனுப்பி விட்டனர்.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புகார் மனுக்கள் பெறும் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவிலும் மனுக்கள் பெறப்படவில்லை. எப்போது புகார் மனு பெட்டி திறக்கப்படும். மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். மருத்துவ உதவி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான அவசர தேவைக்கான புகார்களையும் அதிகாரிகள் ஏற்கவில்லை.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், “புதிய அரசு அமைய போகும் நிலையில், அதிகாரிகள் அனைவரும் எந்த ஊருக்கு எப்போது டிரான்ஸ்பர் வரும் என காத்திருக்கிறார்கள். அனைவரும் பணியிடம் மாறி செல்வது உறுதி என தெரிந்து அசால்டாக இருக்கிறார்கள்.
ஏற்கனவே கடந்த காலங்களில் வந்த பெட்டிசன்கள் மூட்டை மூட்டையாக கிடக்கிறது. இதை எல்லாம் பிரித்து பார்க்க ஆளில்லை. 4 அடி உயர புகார் பெட்டி பூட்டு போட்ட நிலையில் கிடக்கிறது. கலெக்டர் அலுவலக அறையில் வைத்த புகார் பெட்டியும் திறக்கவில்லை வரும் திங்கள் கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்க போகிறது.
ஏற்கனவே கொடுத்த புகார் மனுவுக்கு பதில் கேட்பார்கள். அதிகாரிகள் பலர் இனி எப்போது பணிக்கு வருவார்கள் என தெரியவில்லை. வருவாய்த்துறை மட்டுமல்ல பெரும்பாலான அரசு துறைகள் இப்படி தான் இருக்கிறது. ஆட்சி அமைந்தால் தான் அதிகாரிகள் யாருக்கு எங்கே பணி என தெரியும், “என்றனர்.
