ஆள் இல்லாத கோவை மேற்கு பைபாஸ் ரோடு… ரூ. 250 கோடி வெட்டி செலவு…!

கோவை மேற்கு பைபாஸ் ரோடு மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது.

4 வழிப்பாதையாக 17.50 மீட்டர் அகலத்தில் இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ரோடு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது.

நகரில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் 50 முதல் 60 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பைபாஸ் ரோட்டினால் மக்களுக்கு போதுமான பலன் கிடைக்கவில்லை.

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை மிக சொற்ப அளவிலான வாகனங்கள் மட்டுமே சென்று வருவதாக தெரிகிறது. குறிப்பாக கோவைப்புதூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் கிராசிங் வகையில் பைபாஸ் ரோட்டை சிறிது தூரம் பயன்படுத்தி வருவதும், ஈஷா யோக மையம் சுற்றுலா செல்லும் கேரள மாநில மக்கள் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 400க்கும் குறைவான வாகனங்கள் இயங்கி வருவதாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. வாகனங்கள் நடமாட்டம் அரிதாக உள்ள காட்டு பகுதிகளுக்கு பெரிய சாலை திட்டத்தை கொண்டு வந்த நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவினர் மீது அதிரடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி, ஈஷா போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வது மிக குறைவு. இங்கே அதிக செலவில் பைபாஸ் போட வைத்து நிதியை வீணாக்கி விட்டார்கள். அதே நேரத்தில் நில கையகப்படுத்தும் வகையில் அதிக தொகை செலவாகி விட்டது.

அதிக வாகன நெரிசல் மிகுந்த மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதே நேரத்தில் பல்லடம், செட்டிபாளையம் ரோடு விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கவில்லை. மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருவதாக தெரிகிறது.

தினமும் விபத்துக்கள் ஏற்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசலால் சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இங்கே ரோடு விரிவாக்கம் செய்ய போதுமான இடம் இருந்தும் திட்ட பணிகள் நடத்தப்படவில்லை.

இதை விட்டு, மைல்கல் மாதம்பட்டி பைபாஸ் ரோடு போட வேண்டிய அவசர சூழல் ஏற்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டின் முக்கியத்துவம் கருதாமல் நிதியை திசை திருப்பி விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 250 கோடி ரூபாய் வெட்டியாக செலவு செய்து விட்டார்கள். மேலும் பேக்கேஜ் 2, 3 போன்ற திட்டங்களுக்கு நிதி வாங்க திட்டமிட்டு அரசிடம் நிர்வாக அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

இங்கே நிலம் கையகப்படுத்த மேலும் 350 கோடி ரூபாய் நிதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவினர் செய்த குளறுபடியால் கூடுதல் செலவாகி விட்டது. அதிக வாகன போக்குவரத்து உள்ள பகுதியில் திட்ட பணிகள் நடத்த அதிகாரிகள் முன் வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்கு பைபாஸ் ரோடு பணியை நடத்த புதுக் ேகாட்டையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு பணி உத்தரவு தரப்பட்டது. ஆனால் இந்த பணியை வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்தினர் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

திட்ட மதிப்பீடு கட்டுப்படியாகவில்லை என அந்த ஒப்பந்த நிறுவனம் செய்யவில்லை எனக்கூறி அதே நிறுவனத்தின் பெயரில் சப் கான்ட்ராக்ட்’ அடிப்படையில் வேறு நிறுவனம் பணி செய்து வருவதாக தெரிகிறது. இந்த மோசடிக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தான் காரணம் என கூறப்படுகிறது.

மேலும் அடுத்த கட்ட டெண்டர் பணிகளையும் சப் கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு வழங்க பேச்சு வார்த்தை நடப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஓடையில் இருந்து கிராவல் மண் திருடி பணிகள் நடத்திய ஊர் மக்கள் வருவாய்த்துறை, கனிம வளத்துறையினருக்கு புகார் தெரிவித்து அதன் பேரில் விசாரணை நடத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலை வராமல் தடுத்து தவறு செய்யும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *