தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் மாணவர் சேர்க்கை…
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று துவங்கியது.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல் உள்பட பல்வேறு படிப்புகளில் மொத்தம் 6921 இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருந்தால் ரூ.300 மட்டும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வும் தொடங்கும். மொத்தமுள்ள இடங்களில் 7.5 சதவீத இடங்கள் அதாவது 403 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பிளஸ் 2 வில் வேளாண் பிரிவு படித்த மாணவர்களுக்கு 223 இடங்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 20 இடங்களும். மாற்றுத்திறனாளிகளுக்கு 128 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
