கோவையில் சடலத்துடன் சாலை மறியல்: 9 பேர் மீது போலீசார் வழக்கு…!
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம்.
இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர்.
இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. சடலத்தை வாங்க மறுத்த மகா மகேஸ்வரனின் தாய் ராக்காயி தனது மகன் சாவில் மர்மம் இருக்கிறது.
அவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து சடலத்தை நடுரோட்டில் வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் . அவருடன் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் காரர்கள் சிலரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
இது தொடர்பாக இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில் ,” மகா மகேஸ்வரன் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு மது போதை பழக்கம் உள்ளது .அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். கடந்த1ம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. போதையில் வீட்டுக்கு வந்த போது அவரது உறவினர்கள் சத்தம் போட்டனர்.
அதனால் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இறந்தபின் அவரது சடலத்தை பார்த்தபோது அவரது உடலில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் போலீசார் மறியல் போராட்டம் நடத்திய உறவினர்கள் மாயாண்டி, சிவகுமார் உள்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் பரிசோதனை பிரிவில் அத்துமீறி உள்ளே புகுந்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்தது .
மேலும் சடலத்தை பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அத்துமீறி கொண்டு வந்து இ எஸ் ஐ மருத்துவமனை வெளியே வைத்து போராட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
