கோவையில் தேர்தல் சோதனை: ரூ 2.76 கோடி நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று வரை 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நகை மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 528 லிட்டர் அளவிலான மது, 129 கிலோ எடையிலான போதை பொருட்கள் 32 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பணம் மற்றும் பொருட்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. ஆர் எஸ் புரம் ப்ரூக் பாண்ட் ரோடு பகுதியில் தொடர்ந்து பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மாவட்ட அளவில் இலவசமாக பொருட்கள் தருவதாக கூறி சிலர் டோக்கன் கொடுத்துள்ளனர். அந்த டோக்கனுக்கு ஐந்து பொருட்கள் தருவதாக தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் ஒரே ஒரு பொருள் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது . இதர பகுதிகளில் எந்த பொருட்களும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன் கொடுத்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில்,” மாவட்ட அளவில் 180 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை மூலமாக சோதனை நடக்கிறது. இதன் காரணமாக பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்கள் அறிவித்து வேட்பு மனு தாக்கல் நடந்த பின்னர் இன்னும் சோதனை தீவிரமாகும். அதற்குப் பிறகு மேலும் பணம் பொருட்கள் பறிமுதல் செய்வது அதிகரிக்கும்,” என்றனர்.
