கோவை மாவட்டத்தில் குத்தகைக்கு விட்டு மீட்கப்படாத அரசு நிலங்கள்…!
பொதுப்பணித்துறை நிலத்தில் குத்தகையில் இயங்கும் உக்கடம் பஸ் டிப்போ..
கோவை மாவட்டத்தில் அரசு நிலங்கள் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில ஆண்டு கால அவகாசம் வழங்கியும், சில ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கியும் நிலங்கள் ஒப்படை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலங்களை மீட்க, அரசு பணிகளுக்கு பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படாமல் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.
மாவட்ட அளவில் குத்தகைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் 25க்கும் மேற்பட்ட குத்தகை இனங்களில் இருக்கிறது. இதில் பெரும்பாலான நிலங்கள் தனியார் வசம் தொழிற்சாலை, கல்வி சங்கம், டிரஸ்ட் என்ற வகையில் பெறப்பட்டிருப்பதாக தெரிகிறது. அரசிடம் மிக சொற்ப விலையில் ஆண்டு குத்தகைக்கு வாங்கிய தனியார் அமைப்புகள் அந்த நிலங்களை வைத்து பல கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டி வருவதாக தெரிகிறது.
ஆனால் அரசு துறையினர் தங்களது நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு அரசு திட்டங்களுக்கு குறிப்பாக அரசு அலுவலகங்கள் கட்ட கூட இடமின்றி அல்லாடும் அவலம் இருக்கிறது. குறிப்பாக அரசின் வருவாயை அதிகமாக்கி தரும் பத்திர பதிவுத்துறையில் கட்டடங்கள் போதுமானதாக இல்லை.
கூடுதலாக 15 கட்டடங்கள் கட்ட இடமின்றி பதிவுத்துறையினர் தவித்து வருகின்றனர். மாவட்ட அளவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் இடமின்றி வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அவலம் இருக்கிறது. வணிக வரித்துறையிலும் போதுமான கட்டடங்கள் இல்லை. ஏரியா பகுதியில் இயங்க வேண்டிய வணிக வரி அலுவலகங்கள் நகரின் மைய பகுதியில் செயல்படும் நிலைமை இருக்கிறது.
ஆனால் கோவை தெற்கு, வடக்கு மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பேரூர், சூலூர், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலூகாவில் குத்தகைக்கு வாங்கிய பல்வேறு தனியார் அமைப்புகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் தொடர்ந்து வைத்திருப்பதாக தெரிகிறது. குத்தகை விதிமுறையில் குறிப்பிட்ட காரணம் தவிர்த்து இதர காரியங்களுக்கும் அரசு குத்தகை நிலங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கிறது குத்தகை நிலங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் அன்றைய தேவையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இவற்றை தங்கள் வசம் கொண்டு வர வருவாய்த்துறையினருக்கு வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் தனியார் வசம் விட்டு வைத்துள்ளனர்.
அரசு நிலங்கள், அரசின் வருவாய்த்துறை வசம் வந்தால் பல்வேறு திட்டங்கள், அரசு அலுவலகங்கள் உருவாக்க முடியும் . மேலும் வணிக வர்த்தக, வியாபார நோக்கத்திற்காக தனியார் அமைப்புகள் அரசு நிலங்களை தொடர்ந்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. குத்தகைக்கு வாங்கிய தனியார் அமைப்புகள் லாப நோக்கமின்றி இலவச சேவைகள் எதையும் செய்யாமல் இருப்பதாக தெரிகிறது.
இருந்தும் அரசு நிலங்கள் குறைந்த தொகையில் குத்தகை என்ற பெயரில் தனியார் வசமே தொடர்ந்து ஒப்படைப்பில் இருக்கிறது. நிலங்களை மீட்க வேண்டும் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் போன்ற மக்கள் சேவை திட்டங்களுக்கு இந்த குத்தகை நிலங்களை பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் தங்களது வசம் உள்ள நிலங்களை பல்வேறு அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்திருக்கிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள நிலங்கள் தனியாரின் மருத்துவ சேவைக்காக 100 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு தாரை வார்த்து தந்துள்ளனர்.
பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும் தங்கள் வசம் உள்ள நிலங்களை மாநகராட்சி, மின் வாரியம் நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகம் என பல்வேறு அரசு தரப்பினருக்கு குத்தகைக்கு ஒப்படைத்திருக்கிறது.
குத்தகை நிலங்கள் அந்தந்த துறையினருக்கு திரும்ப கிடைத்தால், அரசின் திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு அந்தந்த ஏரியாவில் கிடைக்கும் வகையிலான செயல் திட்டங்களை செய்து தரமுடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
