சட்டமன்ற தேர்தலால் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை…!

தமிழகத்தில் ரேஷன் கார்டு கேட்ட தினமும் பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற வெப்சைட் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கி வருகிறார்கள்.

ரேஷன் கார்டு பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய செல்போன் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்ய ஆன்லைன் போர்டல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களுக்கு இனி புதிதாக ரேஷன் கார்டு வழங்கக் கூடாது என வழங்கல் பிரிவுக்கு உத்தரவு தரப்பட்டது . அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது .

மாநில அளவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.

நடத்தை விதிகள் காரணமாக இந்த புதிய ரேஷன் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வழங்காமல் தடுக்க ஆன்லைன் பயனாளர்கள் பகுதி முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சிவில் சப்ளை பிரிவினர் கூறியதாவது புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட மாட்டாது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரிசி பருப்பு பாமாயில் உள்ளிட்ட வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தடை இன்றி வழங்கப்படும்.

தாயுமானவர் திட்டத்தில் முதியவர்களுக்கு வீடு வீடாக உணவு பொருட்கள் தேடி சென்று வழங்கும் பணி தடை இன்றி நடத்தப்பட்டு வருகிறது. சிலர் மருத்துவ காரணங்களுக்காக தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெறுவதற்காக ரேஷன் கார்டு அவசியம் என கேட்கிறார்கள்.

அது போன்ற ரேஷன் கார்டுகள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம். உணவு பொருள் தேவைக்கான ரேஷன் கார்டுகள் தேர்தல் முடியும் வரை வழங்கப்பட மாட்டாது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *