தீபாவளி போனஸ்… வரும் 9ம் தேதி முதல் மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கவில்லை என பணியாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து தினக்கவி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், ஓட்டுநர், கிளீனர், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஆர்.ஆர் சிறப்பு பணியாளர்கள் வரும் 9ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானம் அறிவித்துள்ளார்.
மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மலேரியா, டிபிசி பணியாளராக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரை மாற்றும் கோவை மாநகராட்சி மாவட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்த ரூ. 793 சம்பளம் வழங்க வேண்டும். முகாந்திரம் இல்லாமல் தொழிலாளர்களை எந்த விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
