திருடனாக மாறிய ஐடி டீம் லீடர்
கோவையில் ஐடி நிறுவனத்தில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப்களை திருடிய டீம் லீடரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம், சுங்கம் பகுதியில் தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் சுழற்சி முறையில் சுமார் 40 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மேலாளராக அபிஷேக் (31) என்பவர் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25ம் தேதி அபிஷேக் நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் இருப்பு குறித்து சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது நிறுவனத்திற்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் கேமிங் லேப்டாப். 6 ஐபோன்கள், 2 ஸ்மார்ட் வாட்ச்கள், 2 விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் மற்றும் டென்டல் கிட் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் அலுவலகத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அதே நிறுவனத்தில் டீம் லீடராக வேலை செய்து வந்த அரியலூர் மாவட்டம் கள்ளத்தூர் கிராமம் தண்டலை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த 3 வாரங்களாக திட்டமிட்டு லேப்டாப், ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மேலாளர் அபிஷேக் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வேல்முருகன் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
