கோவையில் பறக்கும் படை சோதனை: அப்சர்வர்கள் பரிசோதனை

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

கடந்த 15ம் தேதி முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பறக்கும் படைகளின் நடவடிக்கைகளில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக புகார் இருந்தது. முறையான ஆவணங்கள் இருந்தாலும் பொருட்கள் மற்றும் பணத்தை விடுவிப்பதில்லை. பொதுமக்களை அலைய வைக்கும் நோக்கத்தில் பறிமுதல் செய்கிறார்கள்.

வியாபார பொருட்கள் என தெரிந்தும் அதனை பரிசு பொருட்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கிறார்கள். இது சரியில்ல என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்யும் பகுதிகளில் கள ஆய்வு நடத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டது, கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் பொது தேர்தல் பார்வையாளர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை சோதனை நடத்திய இடங்களில் தேர்தல் பார்வையாளர்கள் மேற்பார்வை செய்தனர். அதில் பறக்கும் படையினர் எப்படி ஆவணங்களை சரி பார்க்கிறார்கள், மக்களிடம் எப்படி பேசுகிறார்கள் அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது,

மரியாதையாக நடத்துகிறார்களா பொதுமக்களை குறிப்பாக முதியோர் மற்றும் பெண்களை தொந்தரவு செய்யும் வகையில் செயல்படுகிறார்களாக என விசாரித்தனர்.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை கொண்டு செல்லும் போது அதை தடுக்கும் வகையில் செயல்பட கூடாது, ஆதாரங்களை கேட்டு வாங்க வேண்டும். அரசியல் கட்சியினர், கட்சி தொடர்புடையவர்கள் தேர்தல் தொடர்பான பொருட்கள் மற்றும் பணம் கொண்டு சென்றால் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் பறக்கும் படையினருக்கு ஆலோசனை வழங்கினர்.

வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் எந்தெந்த பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்கள், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் மற்றும் வார்டு அலுவலகங்களில் விதிமுறை மீறல் இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர்கள் நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படையினருக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *