கோவையில் அண்ணாமலை போட்டியா…!? திமுகவினர் அதிர்ச்சி
பைல் படம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்து அதிமுக அறிவித்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முடிவு செய்யப்படவில்லை.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல் பரவியது.
கோவைக்கு நரேந்திர மோடி வந்த போது வரவேற்பதற்காக அண்ணாமலை வரவில்லை. வரவேற்பு பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்தது என வானதி சீனிவாசன் நிருபர்களிடம் பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னது பொய் என அண்ணாமலை தரப்பினர் வரவேற்பு பட்டியலில் உள்ள பெயர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில் அண்ணாமலை பெயர் இடம் பெறாமல் இருந்தது.
இதற்கிடையே அண்ணாமலை புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக சென்று விட்டார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அண்ணாமலையை உடனடியாக சென்னைக்கு அழைத்துள்ளார். அவர் சென்னைக்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட உள்ளார். இதேபோல் கோவை மாவட்டத்தில் அண்ணாமலை போட்டியிட்டால் அது தேர்தலில் பெரும் வெற்றி அலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டால் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தனது சொந்த தொகுதியான வடக்கு தொகுதியை தர வேண்டும் என காத்திருக்கிறார். இப்படித் தொகுதி மாற்றம் நடந்தால் அண்ணாமலையின் தேர்தல் விஸ்வரூபம் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை களத்தில் இறங்குவது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
