கோவையில் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த 3.10 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் குலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 4.55 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பறிமுதல் செய்த பொருட்கள் அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது, பணம், மாவட்ட கலெக்டர் அலுவலகக்கின் கணக்கு பிரிவில் ஒப்படைத்து பின்னர் மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. இப்படி பெறப்பட்ட பணம், இதுவரை முறையாக கணக்கு காட்டியதன் அடிப்படையில் நேற்று வரை 3.10 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. ஆனால் 700 லிட்டருக்கும் அகிகமான மதுபானம், 145 கிலோ கஞ்சா, 737 கிராம் எடையிலான தங்க நகை, ஆபரண வகையான பொருட்கள், 2583 கிலோ எடையிலான பாத்திரம், எலக்ட்ரானிக் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. உரிய ஆவணங்களுடன் கொண்டு வரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடையின் 20 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யாமல் விடப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், “நகை பொருட்கள் தொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. பொருட்களை விரைவாக வழங்க இயலாது. சில இடங்களில் பாத்திரம் பறிமுதல் தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது, ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *