நொய்யல் புதுக்காடு தடுப்பணையில் விரிசல்…
கோவை: நரசிபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆறு எனப்படும் காஞ்சிமா ஆற்றின் புதுக்காடு தடுப்பணை அருகே முறையற்ற வகையில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஆற்றின் இயற்கையான நீரோட்டம் மற்றும் தடுப்பணையின் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்காடு தடுப்பணை அருகே இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றின் இயற்கையான பாதை முறையற்ற வகையில் அகலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றின் இயற்கையான வளைவுகள் மாற்றப்பட்டதுடன், கரைகளை பாதுகாத்து வந்த மரங்கள் மற்றும் தாவரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் இயற்கையான நீரோட்ட இயக்கம் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் மணல் அதிகமாக படிவதற்கும், மற்ற பகுதிகளில் கரைகள் அரிக்கப்பட்டு இடிந்து விழுவதற்கும் வாய்ப்புள்ளது. தடுப்பணையின் பக்கவாட்டில் ஏற்கெனவே உறுதியாக இருந்த ஆற்றங்கரை இயந்திரங்களால் சேதப்படுத்தப்பட்டு, அதே பகுதியில் தளர்வான மணல் குவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, இந்த மணல் அடித்துச் செல்லப்பட்டால் தடுப்பணையின் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு சுவர்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படக்கூடும். மேலும், கரையோர மண் அகற்றப்பட்டதால் முதிர்ந்த மரங்களின் வேர்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மரங்கள் சாய்ந்து விழுவதற்கும், கரைகள் மேலும் சரிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பணிகளுக்கான நிர்வாக அனுமதி. ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல்கள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். புதுக்காடு தடுப்பணை பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து உடனடியாக கள ஆய்வு நடத்த வேண்டும். தடுப்பணையின் அடித்தளம், பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் சேதமடைந்ததாக கூறப்படும் ஆற்றங்கரையின் தற்போதைய நிலை குறித்து பொறியியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தற்காலிகமாக மணலை குவிப்பதற்குப் பதிலாக, தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு கரைகளை பலப்படுத்துதல், கற்கள் பதித்தல் மற்றும் கம்பி வலைக் கற்சுவர் அமைத்தல் உள்ளிட்ட நிரந்தர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
