ரூ.5452 கோடி வருவாய் இலக்கை எட்டுமா கோவை மண்டல பதிவுத்துறை…?!

கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் ரூ.5,452 கோடி வருவாய் இலக்கை எட்டுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மோசடி பதிவுகளால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்.

கோவை மண்டல பத்திரப்பதிவு துறையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் இருக்கிறது. இங்கே 50 பத்திரப்பதிவு அலுவலங்களின் மூலமாக தினமும் சுமார் 700 முதல் 800 பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

சமீப காலமாக எம்ஓடி என்ற ஒப்பந்தம். ரசீது போன்ற பத்திரங்கள் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வகையிலான நடைமுறை தீவிரமாக இருந்த போதிலும், பத்திர எழுத்தர்களின் ஆதிக்கம் சார் பதிவாளர் அலுவலகங்களில் கொடிகட்டி பறக்கிறது.

பொதுமக்கள் பதிவு அலுவலகம் வந்தாலும், பத்திரப்பதிவு செய்வது திரும்பபெறுவது எல்லாம் பத்திர எழுத்தர்கள் மூலமாகவே நடக்கிறது. பொதுமக்கள் மட்டும் அலுவலகம் வந்து செல்லும் நடைமுறையை பதிவுத்துறை அமலாக்காமல் விட்டுவிட்டது. இதுவே புரோக்கர்களாக மாறி லஞ்சம் பெற வழிவகை செய்யும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மண்டல அளவில், கடந்த சில மாதங்களாக பத்திரப்பதிவு சற்று குறைந்து வருகிறது.

பதிவு கட்டணம் அதிகமாக இருப்பதால், குறைந்த பதிவுகளின் மூலமாகவே அதிக வருவாய் பெற முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. மண்டல அளவில் நடப்பாண்டில் ரூ.5,452 கோடி அளவிற்கு வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கை எட்டும் வகையில் பதிவுத்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி கிராமங்கள் பூஜ்ஜிய மதிப்பு காட்டுகிறது. மேலும் பட்டா விவகாரம் அனைத்து சப்-டிவிஷன்களுக்கு கைடு லைன் மதிப்பு நிர்ணயம் செய்து அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பதிவுத்துறையின் வருவாய் முடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

சில பகுதிகளில் போலி ஆவணம், போலி நபர்கள் மூலமாக பத்திரப்பதிவு நடக்கிறது. சில பதிவுத்துறை அலுவலர்கள், பத்திர எழுத்தர்களுடன் கூட்டு சேர்ந்து வாரிசு வகையறாக்களில் தகுதியில்லாத நபர்களை அடையாளம் காட்டி மோசடியாக நிலம் பதிவு செய்கிறார்கள்.

பழைய சொத்து ஆவணங்கள், அதிக வாரிசு இருக்கும் பத்திரப்பதிவுகளில் பெரிய அளவில் மோசடி நடக்கிறது. போலியான ஆவணம் மூலமாக மோசடியாக பத்திரப்பதிவு செய்வது கண்டறியப்பட்டதால் அதை திருத்தம் செய்ய, ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருக்கிறது. அதிகாரிகள் செய்யும் தவறினால், சொத்துக்களை இழப்பவர்கள் அதை மீட்க முடியாமல் தவிக்கிறார்கள். மண்டல அளவில் பல மோசடி பத்திரப்பதிவு, மேல் முறையீட்டில் முடங்கி கிடக்கிறது. பதிவுத்துறையில் அனைத்து சர்வே எண்களுக்கும் வழிகாட்டு மதிப்பு கிடையாது. திட்டப்பணிகள் என்ற பெயரில் பல கிராமங்கள் பூஜ்ஜிய மதிப்பில் வைக்கப்பட்டு, பதிவு செய்யாமல் முடக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பட்டா பிரச்னையால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *