168 ஆண்டு பொக்கிஷம்… கோவையில் பஞ்சு குடோன் பொதுப்பணித்துறை அலுவலகம் ஆனது…!
கோவையில் பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரம் 1850ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தது.
அந்த கால கட்டத்தில், கோவையில் பிரமாண்ட அலுவலகங்களும், குடியிருப்புகளும் உருவானது. கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிந்த பிரிட்டீசார், அதனை சேமித்து மில்களுக்கு அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக நகரின் மையப்பகுதியில் 4,500 சதுரடி பரப்பில் 50 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை கடந்த 1858ம் ஆண்டில் கட்டினர்.
கான்கிரீட் வசதி இல்லாத அந்த காலத்தில் தேக்கு மரத்தை வைத்து அதன் மீது கான்கிரீட் தளம் அமைத்திருந்தனர். தாங்கும் தூண்களிலும் சுவர்களுக்கு இடையே 100 ஆண்டு கடந்த தேக்கு மரங்களை வைத்தனர். தேக்கு மரத்திற்கு இடையே வட்ட வடிவ தூண் அமைக்கப்பட்டது. சுமார் 100 டன் தேக்கு மரத்தின் மூலமாக
பிரமாண்ட கட்டடம் அமைத்தனர். இந்த கட்டடம் கோவையின் 25வது கலெக்டராக பணியாற்றிய செர்ரி திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் வெளிச்சம் புகாத வகையில் கிடங்கு ஒன்றும் அமைத்தனர். இந்த கிடங்கிற்கு 12 அடி உயரம், 10 அடி அகலத்தில் பிரமாண்டமான தேக்கு கதவு அமைத்தனர். இந்த கதவு சுமார் 2 டன் எடை கொண்டது. இதை ஒரு நபரால் எளிதாக திறக்க முடியாது.
இந்த இடங்கில் தான் பஞ்சு மூட்டைகளை டன் கணக்கில் சேமித்து வைத்தனர். 1880 ஆண்டில் இந்த பஞ்சு குடோன் கட்டடம் பொதுப்பணித்துறை அலுவலகமாக மாற்றப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் மின் வாரியம், குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் இருந்தது.
பொதுப்பணித்துறையில் இலாகா பொறியாளர் பதவி உயர்வாக கருதப்பட்டது. இந்த பதவியில் கலெக்டருக்கு இணையான அந்தஸ்து உள்ள அதிகாரி நியமிக்கப்பட்டார். 160 ஆண்டு கடந்த இந்த கட்டடம் தற்போதும் பொதுப்பணித்துறை அலுவலகமாக இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் கட்டடம் பராமரிப்பு, மின்னியல் துறைகள் இயங்குகிறது. ஓட்டு கூரையுடன் பழங்கால பாரம்பரியத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த கட்டடம். கடந்த 2005ம் ஆண்டில் பழமையான கட்டடங்களை இடிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பஞ்சு குடோன் கட்டடத்தின் ஸ்திர தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது கட்டடம் இன்னும் 50 ஆண்டுகள் பலமாக இருக்கும் என தெரியவந்தது.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், “160 ஆண்டு கடந்த இந்த கட்டடத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டில் தலா ஆயிரம் ரூபாய் பரிசு தரப்பட்டது. மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் கட்டடத்திற்குள் இருந்தால் சீதோஷ்ண நிலையில் எந்த மாற்றமும். இருக்காது. வெயில் காலத்தில் மின் விசிறி இல்லாவிட்டால் கூட இந்த கட்டடத்தில் இருந்தால் வியர்க்காது.
இயற்கையான பொருட்கள் மூலமாக கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. பராம்பரிய ஓட்டு கூரை இருப்பதால் இங்கே புறாக்களும், சிட்டுக்குருவிகளும் அதிகமாக வசிக்கின்றன,” என்றனர்.
