ஓட்டு மெஷினை எங்க வைக்கலாம்.. அதிகாரிகள் ஆய்வு. .
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 146 ஓட்டு சாவடிகள் அமைக்க, அதாவது 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஓட்டுமெசின்கள் சரி பார்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை நடத்த சிட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்படும். இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எண்ணிக்கை மையத்தில் 15 முதல் 22 ரவுண்ட் டேபிள் அமைக்க மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிவறை வசதிகள் அமைக்க வேண்டும். எண்ணிக்கை மையம், ஸ்டிராங்க் ரூம் தொடர்பான விவரங்கள், வரைபடங்கள் தயாரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை கடந்த பல ஆண்டாக அரசு தொழில் நுட்ப கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இதர சில இடங்களில் எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு அரசு தொழில் நுட்ப கல்லூரி எண்ணிக்கை மையம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. தற்போது நடக்கவுள்ள தேர்தலில் எண்ணிக்கை மையங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஆர்டீஒக்கள் ராமகிருஷ்ணன், மாருதி பிரியா, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகாசலம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது ஓட்டு எண்ணிக்கை மையங்கள் கடந்த காலங்களில் இருந்ததை போல் அமைக்கப்படும். கூடுதல் வசதிகள் அந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்கள், ஏஜன்டுகள் ஓட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்படும். கடந்த காலங்களில் எலி தொல்லை, மின் தடையால் ஓட்டு மெசின் அறைகள் கண்காணிப்பு காட்சிகளை சில நிமிட நேரம் பார்க்க முடியவில்லை. தற்போது அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க தேவையான வசதிகள் செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். ஓட்டு பதிவு முடிந்த பின்னர், மெசின்களை பாதுகாப்பாக அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டிய நிலையிருந்தால் அதற்காக கூடுதல் திட்டங்களை மேற்கொள்ள தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
