ரேஷனில் வாங்காம கிடக்குது ரூ.12.30 கோடி.. 41 ஆயிரம் பேரை காணோம்..!
கோவை மாவட்டத்தில், 1401 ரேஷன் கடைகள் உள்ளது. மாவட்ட அளவில் 11,20,965 அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன் தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு கார்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் என அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கடந்த 8ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.
மாவட்ட அளவில், பொங்கல் பரிசு தொகையாக 336.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த தொகை அனைத்து ரேஷன் கடைகளுக்கும். கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகையுடன் இலவசமாக வேட்டி சேலைகளும் ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை, முழு கரும்பும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் ரேஷன் கடையில் டோக்கன் முறையில் பொதுமக்களுக்கு இந்த பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. இதில் நேற்று வரை 96 சதவீதம் பேருக்கு, அதாவது 10,79,936 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இன்னும் 41,029 பேர் பொங்கல் பரிசு தொகை பெறவில்லை. இந்த கார்டுதாரர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை வாங்க மறுத்து வராமல் விட்டு விட்டார்களா, வெளியூர் சென்று விட்டதால் பரிசு தொகை பெறவில்லையா, போலியான ரேஷன் கார்டுகளாக இருக்குமா என பல்வேறு சந்தேகம் நிலவுகிறது. மாவட்ட அளவில் வாங்காத கார்டுதாரர்களின் 12,30,87,000 ரூபாய் அப்படியே இருக்கிறது. அவகாசம் வழங்கியும் அதிக நபர்கள் பரிசு தொகை வாங்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடரபாக கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்ட போது, “உரிய நபர்களுக்கு பரிசு தொகை முறையாக வழங்கப்பட்டது. ரேஷன்கார்டுதாரர்கள் ஏன் வரவில்லை என தெரியவில்லை, இது தொடர்பாக விசாரிக்கிறோம். வாங்காத பரிசு தொகை முறைப்படி அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். ” என்றார்.
தமிழக நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “ ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள், பரிசு தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. பயோ மெட்ரிக் இருப்பதால் விரல் ரேகை பதிவு இன்றி பொருட்கள் பெற முடியாது. எனவே பரிசு தொகை முறையாக வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அதிக நபர்கள் பரிசு தொகை ஏன் பெறவில்லை என விசாரித்தோம்.
ஒரு கடையில் 23 பேர் பரிசு தொகை பெறவில்லை. அந்த முகவரியில் விசாரித்த போது ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்தார் வர முடியாது எனக்கூறி விட்டார். சிலர் முதியோர் காப்பகத்தில் இருந்தனர். சிலர் அந்த முகவரியில் இல்லை. சிலர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. பரிசு தொகை இருப்பது தெரிந்தும் அதை வாங்க யாராவது மறுத்திருந்தால் அது அரிது தான். இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், வெளியூர் வெளிநாடு சென்றவர்களால் தான் அதிக தொகை வாங்கப்படாமல் இருக்கிறது. ” என்றார்.
