பலாத்காரம் செய்து படுகொலை செய்த பாவிக்கு ஆயுள்..
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் முத்துக்குமார் (42 ). கட்டட கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கும் நட்பு இருந்தது . இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர் .
இந்த நிலையில் அந்த பெண் தனது குடும்ப தேவைக்காக மூன்று பவுன் தங்க நகையை முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தார் . அதனை அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறு கேட்டு இருந்தார். நகையை வாங்கி சென்ற முத்துக்குமார் அதை அடமான வைத்து பணத்தை தரவில்லை. நீண்ட காலமாக பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார், நகையையும் திருப்பி தரவில்லை .
இந்த நிலையில் அந்த பெண் தங்க நகையை கேட்டு வற்புறுத்தி வந்தார். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த பெண் வீட்டுக்கு சென்ற முத்துக்குமார் வீட்டில் இருந்த அவரது 13 வயது மகளிடம் தங்க நகை எனது வீட்டில் இருக்கிறது. என்னுடன் வந்தால் தருகிறேன் எனக்கூறி அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அவர் இந்த விவரங்களை வெளியே சொல்லி விடுவார் என பயந்து சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் போட்டு சென்று விட்டார். மகளை காணாமல் தேடி வந்த அந்த கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது முத்துக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவரம் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர் . இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது .வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
