கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதையடுத்து அந்த யானை அய்யாசாமி கோயில் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த நிலையில் எட்டிமடை அருகேயுள்ள திமில் மலை பகுதியில் வனப்பகுதிக்கு அருகே அந்த பெண் காட்டு யானை நேற்று உயிரிழந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே யானையின் உடலை வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதன் உடலில் எவ்வித வெளிகாயங்களும் இல்லை என்பதும், உயிரிழந்த யானை வயிற்றில் 14 மாத யானை குட்டி இருப்பது தெரியவந்தது.
இந்த யானை போதுமான உணவு, ஊட்டச்சத்து இல்லாமல் காய்ந்த வனப்பகுதியில் தவித்தது.
யானையின் நிலைமையை தெரியாமல் வயிற்றில் பெல்ட் போட்டு கட்டி கிரேனில் தூக்கி உள்ளனர். முறையாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். சில நாட்கள் அதற்கு வனத்துறை சார்பில் தீவனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கர்ப்பிணி யானை உயிர் பிழைத்திருக்கும்.
வனத்துறையினர் அவசரப்பட்டு நோய் பாதிப்பில் இருந்த யானையை காட்டுக்குள் அனுப்பி விட்டனர். இதனால் அது உயிரிழந்து விட்டது என வன அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விரைவில் முழுமையாக போஸ்ட்மார்ட்டம் செய்து யானை இறப்பிற்கான காரணம் கண்டறியப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கர்ப்பிணி யானை இறந்தது கோவை மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
