கோவை சிறுவாணி அணையில் கடும் வறட்சி. பாதாளத்தில் நீர்மட்டம்…!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது .

அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி. கடந்த சில மாதம் முன்பு உச்சத்தில் இருந்த அணையின் நீர்மட்டம் இப்போது13.30 அடியாக குறைந்துவிட்டது. அதாவது கடல் மட்ட உயர கணக்கின்படி 867.48 மீட்டர் (slm) ஆக இருக்கிறது. இன்னும் 863.40 மீட்டர் வரை குடிநீர் பெற முடியும்.

தற்போது தினமும் 4.6 கோடி லிட்டர் குடிநீர் தினமும் பெறப்படுகிறது. அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் அளவிற்கு குடிநீர் பெற முடியும். அணையின் நீர்மட்டம் தினமும் 6 முதல் 8 சென்டிமீட்டர் வரை குறைந்து வருகிறது. இதை அளவுக்கு குடிநீர் எடுத்து வந்தால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மே மாதம் இறுதி வரை சமாளிப்பாக குடிநீர் வழங்க முடியும்.


ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதுவரை தற்போது உள்ள குடிநீரை மேலும் குறைத்து தொடர்ந்து வழங்க வேண்டியிருக்கும். சிறுவாணி அணையின் நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் சிறுவாணி குடிநீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோர கிராமங்களுக்கு மாற்று குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக கோவை மாநகரப் பகுதியில் பில்லூர் குடிநீர் மற்றும் ஆழியாறு குடிநீர் மூலமாக சிறுவாணி பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக குறைகிறது. வரும் நாட்களில் சிறுவாணி அணையில் இருந்து நீர் எடுப்பது வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.

தற்போது அணையின் கடைசி வால்வு மூலமாக குடிநீர் பெறப்படுகிறது. இன்னும் மூன்று மீட்டர் அளவிற்கு குடிநீர் மட்டம் குறைந்தால் நில மட்டத்தை ஒட்டியுள்ள பழங்கால தடுப்பணை மூலமாக குடிநீர் பெற வேண்டி இருக்கும். அந்த தடுப்பணையில் 1.5 மீட்டர் வரை குடிநீர் பெற முடியும்.

ஏற்கனவே இந்த தடுப்பணை நீர் எடுக்க கூடாது என கேரளா அரசு காங்கீரிட் ஸ்லாப் போட்டு மூடிவிட்டது. எனவே இதில் தற்போது குடிநீர் பெற முடியாது என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

தற்போது உள்ள குடிநீரை சமாளித்து பயன்படுத்தினால் பருவ மழை காலம் வரை தாக்குப் பிடிக்க முடியும் எனவும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *