கோவை மாவட்டத்தில் மழையின் காரணமாக மின்தடை அதிகரிப்பு

கோவை மின்வாரிய மெட்ரோவில் ஒண்டிப்புதூர் மையம், நகரியம் ஆகிய 3 டிவிஷன்கள் உள்ளன.

தற்போது பெய்து வரும் பருவமழையால் மாநகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பழுது, பியூஸ் போதல் உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக மின்வாரியத்தின் மின்னகம் சேவை எண்ணில் பொதுமக்கள் புகார் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகார்களை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒரே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்தடை புகார்கள் பெறப்பட்டால், அப்பகுதிக்கு சிறப்பு மொபைல் வேன் குழு அனுப்பப்படுகிறது. இக்குழுவினர் டிரான்ஸ்பார்மர் பழுது பியூஸ் போதல் உள்ளிட்ட பெரிய அளவிலான மின்தடை பிரச்னைகளை சரிசெய்கின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழை காரணமாக கோவை மாநகர் வட்டத்தில் மட்டும் மின்தடை, டிரான்ஸ்பார்மர் பழுது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக தினமும் சுமார் 1,000 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. பொதுமக்கள் மின்னகம் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணில் புகார் பதிவு செய்கின்றனர். புகார்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், கோவை மெட்மேராவில் உள்ள மூன்று டிவிஷன்களுக்கு தலா ஒரு மொபைல் வேன் குழு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இக்குழுவில் 2 கேங்மேன்கள். 2 மின்பாதை ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நகரியம் பகுதியில் இரவு நேர மின்தடை பிரச்னைகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மொபைல் வேன் குழு தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை செயல்படும். இவர்கள் தனிப்பட்ட வீட்டு மின் இணைப்பு கோளாறுகளை தவிர்த்து, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட பெரிய அளவிலான மின்தடை பிரச்னைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *