கோவையில் பாஸ் ஸ்கேம் மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை …
கோவையில் ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் புதிய வடிவில் ஆன்லைன் பண மோசடி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தனியார் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைக் குறிவைத்து பாஸ் ஸ்கேம் மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து ஊழியர்களின் வாட்ஸ்அப் அல்லது செல்போனுக்கு மெசேஜ் அனுப்புகின்றனர்.
அதில், தாங்கள் தான் அந்த நிறுவனத்தின் முதலாளி என பேசுகின்றனர். மேலும், முதலாளியின் படத்தை வாட்ஸ்அப் டிபி ஆக வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவசர தேவை என்று கூறி உடனடியாக பணம் அனுப்புமாறு கேட்கின்றனர். தனது முதலாளியிடம் இருந்து தான் மெசேஜ் வருகிறது என நம்பி, உண்மை நிலையைச் சரிபார்க்காமல் ஊழியர்களும் அவர்கள் கேட்கும் வங்கி கணக்கிற்குப் பணத்தை அனுப்பி ஏமாந்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இதுபோன்று 20 க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைம் போலீசிற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதற்கட்டமாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களிலேயே இந்த பாஸ் ஸ்கேம் மோசடி மூலம் சுமார் ரூ.1 கோடி வரை ஊழியர்கள் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் இந்த பாஸ் ஸ்கேம் மோசடி நபர்கள் மத்திய பிரதேசம் போபால் நகரில் இருந்து செயல்படுவதாக கண்டறியப்பட்டது. இவர்களை பிடிக்க கோவை மாநகர சைபர் கிரைம் போலீசின் தனிப்படையினர் நேற்று போபால் புறப்பட்டு சென்றனர் இந்த மோசடியில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கலாம் என தெரிகிறது.
