சாதி பாகுபாடு களைவதற்கு போராட வேண்டியிருக்கிறது… அமைச்சர் வன்னியரசு பேட்டி
கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் அகிலன் வீட்டிற்கு, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மாணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். இதன்பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார். மாணவன் அகிலனுக்கு வீர வணக்கத்தை செலுத்தி இருக்கிறேன். நீதியரசர் சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதிய பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை, களைய எல்லா வேலையும் செய்ய வேண்டும் பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்க கூடாது என்பதுதான் முக்கியமானது, முதன்மையானது. அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்வோம். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு இருக்கிறது. முழுமையான விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்.
சம்பவம் நடந்த முதல் நாளில் இருந்தே தோழர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். காவல்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் சென்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன். உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருந்தது.
நானும் அதைத்தான் வலியுறுத்தினேன். சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அனைத்து சந்தேகங்களும், பிரச்னைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குழப்பங்கள் தயக்கங்கள் இருப்பதால் முழுமையான விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்பிக்க முடியாது. நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த போராட்ட களத்தில் நானும் நின்றிருப்பேன். போராட்டக்களம் என்பது நீதி பெறுவதற்கான இடம் நான் அமைச்சரவையில் இருக்கிறேன், அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். இதில் எந்த இடத்திலும் பின்னடைவு இல்லை. எஸ்சி-எஸ்டி சட்டப்படி வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. மாணவர் பிரச்னைக்காக 7 நாட்கள் போராடுகின்றனர். 7 நாட்கள் போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம்.
எல்லா மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். பள்ளி கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முதன்மையானது. தமிழக அமைச்சரவையில் பட்டியல் இனத்தவர்கள் எத்தனை பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல இந்த சமூக கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக சாதி கட்டமைப்பாக இருக்கிறது. இப்போது 8 பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை. இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதான கட்டமைப்பு கொண்டது அதை உடைக்க போராடி வருகிறோம். 8 பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. போராடித்தான் அனைத்தையும் பெற பெற வேண்டி இருக்கிறது. சாதிய அழுக்குகளை அறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய பாகுபாடு களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் வன்னியரசு கூறினார்.
