கோவையில் தீபாவளி திருடர்களை கண்டறிய கண்காணிப்பு கோபுரம்…

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அடுத்த மாதம், 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உட்பட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடை விதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

பொதுமக்களின் கூட்டத்தை சீர்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் அதில் நின்று போலீசார் கண்காணிக்க உள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த உள்ளனர். அதேபோல சாதாரண உடைகளில் தனிப்படை போலீசார் ரோந்து செல்லவும் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளிக்கு இன்னும், 2 வாரங்களே உள்ளதால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம். நகை திருடுவதை தடுக்க போளீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கலாம். அதேபோல ஒப்பணக்கார வீதியில் 4 இடங்கள், பெரியகடை வீதியில் 2 இடங்கள், கிராஸ்கட் ரோடு பகுதியில் 2 இடங்கள், நஞ்சப்பா ரோட்டில் 2 இடங்கள் என 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நின்று போலீசார் கண்காணிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *