ஆன்லைனில் ‘பாஸ் ஸ்கேம்’ : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!
தமிழகத்தில் தற்போது ‘பாஸ் ஸ்கேம் என்ற பெயரில் புதிய வடிவில் ஆன்லைன் பண மோசடி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைக் குறிவைத்து பாஸ் ஸ்கேம் மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து ஊழியர்களின் வாட்ஸ்அப் அல்லது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
அதில், தாங்கள் தான் அந்த நிறுவனத்தின் முதலாளி என்று பேசுகின்றனர். மேலும், முதலாளியின் படத்தை வாட்ஸ்அப் டிபி ஆக வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவசரத் தேவை என்று கூறி உடனடியாகப் பணம் அனுப்புமாறு கேட்கின்றனர்.
தனது முதலாளியிடம் இருந்து தான் மெசேஜ் வருகிறது என நம்பி, உண்மை நிலையைச் சரிபார்க்காமல் ஊழியர்களும் அவர்கள் கேட்கும் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பி ஏமாந்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இதுபோன்று 20 க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் குவிந்துள்ளன. இது தொடர்பாக முதற்கட்டமாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களிலேயே இந்த பாஸ் ஸ்கேம் மோசடி மூலம் சுமார் ரூ.1 கோடி வரை ஊழியர்கள் பணத்தை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இதுபோன்ற அடையாளம் தெரியாத எண்களிலிருந்து நிறுவனத்தின் முதலாளி அல்லது உயர் அதிகாரிகள் பேசுவது போல குறுஞ்செய்தி வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரடியாகத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பிறகே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான எண்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
