கோவை ஓட்டு எண்ணிக்கை மையம் செல்ல பாஸ்…
கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படும்.
இதில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஒரு தொகுதிக்கு 120 பேர் வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கு 1200 பேர் பணியில் இருப்பார்கள். இது தவிர போலீசார் 2 ஆயிரம் பேர் பணியில் இருப்பார்கள். மாவட்ட அளவில் தேர்தலில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
14 முதல் 22 சுற்றுக்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதால், 14 முதல் 22 டேபிள் அமைக்கப்படும். ஒவ்வொரு டேபிளிலும், வேட்பாளர்களின் ஏஜன்டுகள் ஒருவர் பணியில் இருக்கலாம். இதன்படி 1820 ஏஜன்டுகள் மற்றும் அதே எண்ணிக்கையில் மாற்று ஏஜன்டுகள் இருப்பார்கள் இது தவிர ஒட்டு எண்ணிக்கை மைய அலுவலர்கள், உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள், உணவு சப்ளையர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருப்பார்கள்.
இவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நாளில் பார்க்கிங் கழிவறை, உணவு வசதிகள் செய்யப்படும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வளாகத்தில் இருக்கும் போது எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படும். தற்போது ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
வரும் 3ம் தேதி இரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்படும். அன்றைய தினம் தடாகம் ரோட்டில் போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேர்தல் பிரிவினர் கூறுகையில் “வேட்பாளர்கள், ஏஜன்டுகளுக்கு பாஸ் தரப்படும். அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் சென்று வரலாம். பாஸ் வாங்கியவர்கள் வேறு தொகுதிக்கு சென்று ஓட்டு எண்ணிக்கையை பார்க்க முடியாது. கடும் விதிகள் பின்பற்றப்படும். அனுமதியின்றி ஒட்டு எண்ணிக்கை மைய வளாகத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், ” என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
