கோவையில் திமுக பாஜக ஒட்டிய ‘முட்டை போஸ்டரால்’ பரபரப்பு..!

கோவை நகரில் கணபதி, ஒண்டிப்புதூர், எஸ் ஐ எஸ் எஸ் காலனி சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி முட்டை என படம் போட்டு பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வைத்தனர்.

இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினருக்கு போட்டியாக இவர்களும் கோவையில் திமுக முட்டை, தீய சக்தி திமுகவை துடைத்தெறிவோம் என போஸ்டர் ஒட்டி வைத்தனர் .

பத்து மதிப்பெண்ணுக்கு முட்டை என குறிப்பிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் போஸ்டர் ஒட்டி வைத்தனர்.
சிங்காநல்லூர் கணபதி என பல்வேறு இடங்களில் இவர்களும் போட்டி போட்டு போஸ்டர் ஒட்டி வைத்திருந்தனர் . மேலும் சிங்காநல்லூர் பகுதியில் அந்தப் பகுதி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி துணை தலைவர் லைஜூ தலைமையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்து வீசினர்.

மேலும் திமுகவை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லைஜூ உள்பட பாஜகவை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர் . கணபதி பகுதியில் போஸ்டர் ஒட்டிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 15 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். நகரில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு கட்சியினர் முட்டையை வைத்து போஸ்டர் ஒட்டி செய்த அரசியல் கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த முட்டை போஸ்டர் விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை நகரில் அரசியல் தொடர்பாக எந்த போஸ்டரும் ஓட்டக்கூடாது என தேர்தல் பிரிவினர் எச்சரிப்புள்ளனர்.

ஆனால் தடையை மீறி பல இடங்களில் ஆட்சேபகரமான விமர்சன போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது‌. இதன் தொடர்ச்சியாக இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி இது போன்ற போஸ்டர்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகையில், ” தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. வெறும் ஸ்டிக்கர் திட்டங்கள் மட்டுமே இருக்கிறது. இதை மையமாக வைத்து விரைவில் போஸ்டர் ஒட்டுவோம் ,”என்றனர்.

திமுக கட்சியினர் கூறுகையில், ” தமிழகத்திற்கு எந்த திட்டமும் மத்திய பாரதிய ஜனதா அரசு அறிவிக்கவில்லை. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும். எதையும் செய்யாமல் பாரதிய ஜனதா கட்சியும் அதற்கு துணையாக அதிமுகவும் இருக்கிறது. ‌ இப்போது ஓட்டு கேட்டு அரசியல் செய்கிறார்கள்,” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *