கோவை மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டை..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தபால்கள்..

கோவை மாவட்டத்தில் 25.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நடந்தது .

இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 19ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையே புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் கடந்த காலங்களில் வாக்காளர் அட்டை சரியாக இல்லாத வாக்காளர்கள், போட்டோ புதுப்பிக்காத வாக்காளர்கள் தங்களது போட்டோக்களை புதுப்பித்து புதிய அட்டை கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டில் பழைய மற்றும் புதிய வாக்காளர்கள் என சுமார் மூன்று லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

எஸ் ஐ ஆர் பணிக்கு பிறகு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிதாக அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறுகையில் ,” மாவட்ட அளவில் 1.50 வாக்காளர் அடையாள அட்டைகள் நொய்டாவிலிருந்து அச்சடிக்கப்பட்டு கோவைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது. தபால் துறை மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் முகவரிக்கு இந்த அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அடையாள அட்டை கேட்டு தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் விண்ணப்பித்தால் முறைப்படி அவர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்து அனுப்பி வைக்கப்படும். அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கூட வாக்காளர் பட்டியல் உள்ள போட்டோவுடன் கூடிய வாக்காளர் சீட்டு மூலமாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்த 13 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டு போட முடியும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *