ரூ.250 கோடியில் அமைக்கப்பட்ட கோவை மேற்கு பைபாஸ் ரோடு அடுத்த வாரம் திறப்பு..!

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது.

250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு பெற்று ரோடு மார்க்கிங் மற்றும் பெயர் பலகை, வழிகாட்டி பலகை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.


அடுத்த வாரம் இந்த பைபாஸ் ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதி வாரம் அல்லது வரும் மார்ச் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிகளின்படி புதிய திட்டப் பணி மற்றும் நிறைவு பெற்ற பணி துவக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.
எனவே பைபாஸ் ரோட்டை
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திறக்க நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்

இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை திட்ட பிரிவு உதவி பொறியாளர் மார்ட்டின் கூறுகையில்,” பைபாஸ் ரோடு அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது . மதுக்கரை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது . இதே போல் மாதம்பட்டியிலும் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலைமையில் இருக்கிறது.

மேம்பால பணி நடைபெற்ற வரும் நிலையிலும் இந்த ரோடு முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,” என்றார்.

மேற்கு பைபாஸ் ரோடு வழியாக கோவை புதூர் , சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், பேரூர், செட்டிபாளையம், பேரூர், பச்சாபாளையம் மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம். இந்த ரோட்டில் வழியாக
சிறுவாணி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர் , நரசிபுரம் ,கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, ஈசா யோகா, வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை இன்றி சென்றுவர முடியும் .

மேலும் இந்த ரோடு மருதமலை கோவிலுக்கு செல்லவும் பிரதானமாக பயன்படுத்தப்படும். புதிய பைபாஸ் ரோடு திறக்கப்படும் போது கோவை பாலக்காடு ரோடு வழியாக போக்குவரத்து கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *