கோவையில் தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தினால் பரபரப்பு…!
மத்திய அரசு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது. அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை கட்டாயம் மாற்றக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏஐடியுசி சார்பில் ஆறுமுகம், செல்வராஜ், எல்பிஎப் சார்பில் சிடிசி துரை, ஆனந்த், தமிழ்செல்வன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய சங்கத்தினர் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கோஷமிட்டனர். தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர். அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கலைந்து போக வற்புறுத்தினர். சில நிமிட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
