கோவை கிணத்துக்கடவு மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய தொந்தரவு பொதுமக்கள் புகார்

கோவை கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;

கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சிக்கலாம்பாளையம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு சொலவம்பாளையம் கிராமத்தில் மயான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் எங்கள் வழக்கப்படி பல தலைமுறைகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றோம். இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி உள்ளது.

மயானத்திற்கு ஆரம்ப காலத்தில் வழிப்பாதையாக அதை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். மேலும் நகரம் வளர்ச்சி அடைய வண்டிப்பாதை தற்போது தார்சாலையாக அமைக்கப்பட்டு அதனை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் எங்கள் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை அதன் அருகில் உள்ள நபர்கள் வாகனங்கள் நிறுத்தியும் தொழில் சார்ந்த பணிகள் செய்வதற்காக எங்களையும், மயானத்தையும் இழிவு படுத்தும் நோக்கில் குப்பைகளை கொட்டி இறந்தவர்களையும், நவீன தீண்டாமைக்கு உட்படுத்தி இழிவுபடுத்திக்கொண்டு உள்ளார்கள்.

மயான இடத்தில் எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் புதைக்க இடம் பற்றாக்குறையாக உள்ளதால் ஏற்கனவே புதை்கப்பட்ட
உடல்களின் மேல் புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படி புதைக்கும் பொழுது ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல் ஒரு பகுதி அழுகிய நிலையில் வெளியில் வந்துவிட்டது. மயான இடம் பெரியதாக இருந்தால் கூட ஆக்கிரம்பில் உள்ளதால் நாங்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குட்பட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கிணத்துக்கடவு வட்டாட்சியர்
மயான இடத்திற்கு சுற்றுசுவர் மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *