கோவையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!
தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற மாரிமுத்து (40. இவரது மனைவி கற்பகவள்ளி(35). குமாரின் நண்பருக்கும், கற்பகவள்ளிக்கும் தகாதபழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து குமார் கண்டித்தார்.
இந்த நிலையில் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவருடன் விட்டு விட்டு, அந்த நபருடன் சென்றுவிட்டார். இருவரும் கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவர் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
மனைவியை குமார் பல்வேறு பகுதியில் தேடினார். அவரின் இருப்பிடம் தெரியவந்த நிலையில் அவர் கருமத்தம்பட்டிக்கு கடந்த 10.07.2014ம் தேதி சென்றார். வீட்டின் கதவை தட்டிய போது
கற்பகவள்ளி கதவை திறந்தார். அவரிடம் வாக்குவாதம் செய்த குமார் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தினார். இதைத் தடுக்க வந்த அவரின் கள்ள காதலரையும் கத்தியால் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த கற்பகவள்ளி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சிவகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
