கோவை மேற்கு பைபாஸ் ரோடு நாளை தமிழக முதல்வர் திறக்கிறார்..!
கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு (Coimbatore Western Ring road) அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவக்கப்பட்டது.
மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது.
250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு பெற்று ரோடு மார்க்கிங் மற்றும் பெயர் பலகை, வழிகாட்டி பலகை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.
நாளை காலை 10.30 மணிக்கு இந்த பைபாஸ் ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இந்த பைபாஸ் ரோடு திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
மேற்கு பைபாஸ் ரோடு வழியாக கோவை புதூர் , சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், பேரூர், செட்டிபாளையம், பேரூர், பச்சாபாளையம் மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம். இந்த ரோட்டில் வழியாக
சிறுவாணி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர் , நரசிபுரம் ,கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, ஈசா யோகா, வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை இன்றி சென்றுவர முடியும் .
மேலும் இந்த ரோடு மருதமலை கோவிலுக்கு செல்லவும் பிரதானமாக பயன்படுத்தப்படும். புதிய பைபாஸ் ரோடு திறக்கப்படும் போது கோவை பாலக்காடு ரோடு வழியாக போக்குவரத்து கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு பொறியாளர்கள் திறம்பட பணிகளை செய்து முடித்துள்ளார்கள். நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்பு பைபாஸ் ரோடு திறக்கப்பட உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
