கோவையில் லோ அதாலத்: 7368 வழக்குகளுக்கு தீர்வு..
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் இன்று கோவை நீதிமன்றங்களிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.
முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பாபுலால் வரவேற்றார். கடந்த 2024 ம் ஆண்டு எல் ஆண்டு டி பைபாஸ் ரோடு, மதுக்கரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ. 52 லட்சத்து 48 ஆயிரம் காசோலையை மாவட்ட நீதிபதி வழங்கினார்.
தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மெயின் ரோட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட மனோஜ் என்பவருக்கு இழப்பீடு தொகை ரூ. 45 லட்சத்து 64 ஆயிரத்து 322 வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் (நிலம்,சொத்து, பாகப்பிரிவினை வாடகை விவகாரங்கள்) மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள் மற்றும் கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்னை வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 7368 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மொத்த தீர்வு தொகை ரூ.10 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 169 ஆகும். மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 154 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 15க்கும் மேற்பட்ட தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட நீதிபதி நாராயணன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் கண்ணன், பாபுலால், சுந்தரராஜன், ராஜலிங்கம், ஹரிஹரன், சார்பு நீதிபதிகள் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய 20 அமர்வுகள் மூலம் மாவட்ட தலைநகரிலும், காலுக்கா அளவில் சார்பு நீதிபதிகள் மற்றும் உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 அமர்வுகள் மூலம் இம்மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மேலும், இந்நிகழ்வில் கோவை வழக்கறிஞர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ் ஏற்பாடு செய்து இருந்தார்.
