கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்திலும், சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு சூலூர் தாலுகா அலுவலகத்திலும்,
கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகே உள்ள தடாகம் ரோடு வேளாண்மை பொறியியல் அலுவலகத்திலும்,
தொண்டாமுத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகத்திலும், கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதிக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
சிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும், கிணத்துகடவு சட்ட மன்ற தொகுதிக்கு மதுக்கரை தாலுகா அலுவலகத்திலும் பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திலும், வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிவதை தடுக்க முன்னதாக இணையதளம் மூலம் வேட்பு மனு தாக்கல் குறித்து விண்ணப்பிக்க வேண்டும்.
