பணம் பரிசு பொருள் தரக்கூடாது. கோவையில் நடத்தை விதிகள் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவு…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ,நோடல் ஆபீசர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் சார்பில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். கட்சி சின்னம் கொடி பேனர் போன்றவற்றை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும். கட்சியினர் ஆட்சேபமான தகவல்களை நோட்டீஸ் மற்றும் பேனர்களில் அச்சிட கூடாது .
மாற்றுக் கட்சியினரை அவதூறாக பேசி வாசகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. அமைதியாக நல்ல முறையில் தேர்தல் நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் புகார் தரலாம்.
வேட்பு மனு தாக்கல் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில் முறையாக நடந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுக்க கூடாது. அப்படி செய்தால் தேர்தல் கமிஷன் உத்தரவின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என என தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் தரப்பில் வாக்காளர் பட்டியல் குளறுபடி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். சில இடங்களில் ஓட்டு சாவடி விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியவில்லை. அதை முறைப்படி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு வைக்க வேண்டும் . பல்வேறு பகுதிகளில் பரிசுப் பொருட்கள் தொடர்பாக புகார் தரப்பட்டது .
ஆனால் தேர்தல் பிரிவினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி பாகுபாடு பார்க்காமல் பணம் மற்றும் பரிசுப் பொருள் தரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
