விஜய் களத்திற்கே வரவில்லை… எஸ் பி வேலுமணி பேட்டி
கோவை விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு தேர்தல் களம் உற்சாகமாக இருக்கின்றது. கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்தோம். பின்னர் சந்தோஷமாக கேரள மாநிலத்திற்கு பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியைதான் விரும்புவார்கள்.
தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சராக வந்தால் மக்களுக்கான ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும். கோவை , திருப்பூர் , நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 21 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தேர்தலில் இந்த 21 தொகுதிகளையும் முழுமையாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.
த.வெ.க. தலைவர் விஜய் திடீரென வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் களத்தில் இல்லை. ஆனால் இன்று திடீரென வந்து வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே அவர் சிரமப்பட்டு இருக்கின்றார்.
தமிழ்நாட்டில் போட்டி தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே தான். இது மக்களுக்கு தெளிவாக தெரியும். இந்த தேர்தலில் கண்டிப்பாக தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
